2 மாதங்களில் 600 தொன் மீன் ஏற்றுமதி!

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடையை நீக்கியதை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் 600 தொன் மீன்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மீன் ஏற்றுமதி இடம்பெற்றுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு முன்னைய அரசாங்கம் மீது கடந்த 2014 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல் விடுத்திருந்தது. ஆயினும், அந்த அறிவுறுத்தலை புறக்கணித்தமையால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலைமையின் கீழ், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒருவருட காலத்திற்குள் அது குறித்து உடனடியாக செயற்பட்டு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மீன் ஏற்றுமதிக்கான தடையை தளர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதற்கமைவாக கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இலங்கை மீதான மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது. எவ்வாறாயினும், வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட ஏனைய நாடுகளுக்கு 7490 தொன்கள் மீன்களை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
|
|