16 வருடங்களின் முடிவுக்கு வந்த வழக்கு!

Monday, September 26th, 2016

இராணுவத்தினர் பவல் வாகனம் ஒன்று மோதியதில் ஹேரத் முதியான்சலாகே ஹீன் பண்டா என்ற ஒருவர் மரணமாகிய சம்பவம் தொடர்பான வழக்கு 16 வருடங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது.

திருகோணமலை சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் இரண்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதிபதி குழாம் வழங்கிய தீர்ப்பையடுத்து, ஒன்றரை இலட்சம் ரூபா நட்ட ஈட்டுத் தொகையை இராணுவ தளபதி செலுத்தியுள்ளார்.

திருகோணமலையில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.

குறித்த வழக்கில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதி குழாம் இந்தத் தீர்ப்பை வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.

இராணுவ பவல் வாகனத்தை ஓட்டிவந்த இராணுவ சாரதியின் கவனயீனத்தினால் ஹேரத் முதியான்சலாகே ஹீன் பண்டா என்பவர் மரணமாகியதாகக் குற்றம் சுமத்தி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் உயிரிழந்தவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமைக்காக அவருடைய மனைவிக்கு 50 ஆயிரம் ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டும் என நீதவான் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆயினும், இதனை ஏற்க மறுத்த இறந்தவரின் மனைவி திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வாகனத்தைச் செலுத்தி வந்த இராணுவ சாரதி, இராணுவ தளபதி, சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக சிவில் வழக்கொன்றைப் பதிவு செய்திருந்தார். வாகன விபத்து மரணம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வந்தபோது குற்றம் சுமத்தப்பட்டவராகிய இராணுவ சாரதி மரணமடைந்திருந்த நிலையிலும், திருகோணமலை மேன் முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.

அங்கு இரண்டு நீதிபதிகள் அடங்கிய வெவ்வேறு குழாமினால் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. இறுதியாக பிரதம நீதியரசரினால் விசேடமாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகளான இளஞ்செழியன், ஜயவர்தன ஆகிய இருவர் அடங்கிய குழாமின் முன்னிலையில் இந்த வழக்கு தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வந்தது.

விபத்து மரணத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட இராணுவ சாரதி உயிரோடு இல்லாத போதிலும், இறந்தவரின் மனைவி அவருக்கு அடுத்ததாக இராணுவ தளபதியையும், சட்டமா அதிபரையும் குற்றவாளிகளாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் உயிரிழந்தவரின் மனைவிக்கான நட்ட ஈட்டை இராணுவத் தளபதியே வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

எனினும் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இராணுவ தளபதி இந்த நட்ட ஈட்டுத் தொகையை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இராணுவ தரப்பில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி தெரிவித்திருந்தனர்.

மேலும் நட்ட ஈட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மரணமடைந்தவரின் மனைவி தனது சட்டத்தரணியின் மூலம் இணக்கம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நட்ட ஈட்டுத் தொகையான ஒன்றரை இலட்ச ரூபாவுக்கான காசோலை நீதிமன்றத்தில் வைத்து, அந்தப் பெண்ணிடம் கையளிக்கப்பட்டு 16 வருடங்களாகத் தொடர்ந்த வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

ilancheliyan-j_06072016_kaa_cmy

Related posts: