12,000 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை – நிதி அமைச்சு!

Tuesday, November 5th, 2019

தற்பொழுது சந்தையில் நிலவும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டிற்கு தீர்வாக 12 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நிதி அமைச்சிற்கு உட்பட்ட லிற்றோ காஸ் நிறுவனத்தின் மூலம் இதனை இறக்குமதி செய்து உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை துறைமுகத்தை வந்தடைந்தள்ளது. இன்று (05) மற்றுமொரு கப்பல் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை மற்றுமொரு கப்பல் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் துறைமுகத்திற்கு வரவுள்ளது. அவசர கொள்வனவின் கீழ் பொது நடைமுறைகளுக்கு அமைவாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள 6,000 மெற்றிக் தொன் வீதம் அடுத்த வாரத்தில் எரிவாயு இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இதற்கு அமைவாக தனியார் இறக்குமதி நிறுவனத்தில் நிலவிய குறைந்த அளவிலான விநியோகத்தினால் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாடு ஒரு வாரத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் இதனால் தேவையற்ற குழப்பத்திற்கு உள்ளாக வேண்டாம் என்று அரசாங்கம் நுகர்வோரான பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டை பயன்படுத்தி பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்த 40 விற்பனை முகவர்கள் நுகர்வோர் அதிகார சபையினால் முற்றுகை இடப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இவ்வாறான முற்றுகை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts: