12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவை 1,493 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் – அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, June 22nd, 2021

திரவ பெற்றோலிய வாயு தொழில்துறையை மறுசீரமைக்கும் விடயம் தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மூலம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவை  சந்தையில் 1,493 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என மேற்படி அமைச்சரவை  உப குழு  முன்வைத்திருந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், எரிவாயு கொள்வனவின் போது, போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்றவற்றை நாட்டின் பிரதான இரு எரிவாயு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்வதற்கும், அதற்காக ஹம்பாந்தோட்டை எரிவாயு முனையத்தை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டுக்கு தேவையான திரவப் பெற்றோலிய வாயு (LPG) கொள்வனவுக்கான நடைமுறைகள், போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நடத்திச் செல்வதற்காக லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கலாக துறைசார் நிபுணத்துவம் கொண்ட உத்தியோகத்தர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உப குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பொறிமுறையை எதிர்வரும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தி அதன் முன்னேற்றத்தின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும் அண்மையில், 9.5 கிலோ என்ற புதிய எரிவாயு கொள்கலன்கள், லீட்டர் அடிப்படையில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டமையால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியிருந்தன.

இந்நிலையில், நுகர்வோர் முன்வைத்த குற்றச்சாட்டுகளையடுத்து, குறித்த எரிவாயு கொள்கலன்களை சந்தையிலிருந்து அகற்ற உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: