11 சிறிய குளங்களை ஒன்றாக்கி 700 மெகாவாட்ஸ் மின்சாரம் பெறும் திட்டத்துக்கு கிளிநொச்சியில் அனுமதி!

Monday, March 4th, 2024

பூநகரி பிரதேச செயலக பிரிவில் 11 சிறிய குளங்களை இணைத்து  700 மெகாவாட்ஸ் மின்சாரத்தை பெறும்  மிகப்பெரிய திட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அனுமதியை  நடைமுறைப்படுத்த மாவட்ட அபிவிருத்திக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலே மும்மொழியப்பட்டு அமைச்சரவை அனுமதித்த திட்டம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 சிறிய குளங்களை ஒன்றாக இணைத்து பூநகரி குளம் அமைக்கப்படவுள்ளது. 2013ம் ஆண்டளவில் இத்திட்டம் நீர்பாசன திணைக்களத்தால் மும்மொழியப்பட்டது.

ஆனாலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார, அரசியல் சூழல் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டிருந்தது.

மண்டக்கல்லாறு, குடமுருட்டி, செம்மங்குன்று பகுதிகளால் நீர் கடலுக்கு செல்கிறது. இதை மறித்தே இத்திட்டம் வரையப்பட்டது. மண்டக்கல்லாறு முதல் குடமுருட்டி வரை இணைத்து 20 கிலோமீட்டர் கட்டு அமைக்கப்பட்டு பூநகரிக்குளம் உருவாகவுள்ளது.

இதற்கிடையில் காணப்படும் 11 குளங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளது. ஏறத்தாழ 9000 ஏக்கர் அளவில் குறித்த குளம் அமையவுள்ளது.

இக்குளம் அமைக்கப்படும் சமவேளையில், குளத்தின் நடுவின் 700 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய மின் உற்பத்தி நிலையம் அமையவுள்ளது. 1280 ஏக்கர் கொண்ட பிரதேசத்தில் சோளர்கள் பொருத்தப்படவுள்ளது. இதன் மூலம் நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி இத்திட்டத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

மேலும், 4.5 அடி உயரமாக உயர்த்தி குளத்தின் அபிவிருத்தி ஆரம்பிக்கப்படும். ஆனாலும் நீர்பாசன திணைக்களம் அதன் அளவு தொடர்பில் கூறுவார்கள். அதன் பின் குறைப்பது அல்லது கூட்டுவது தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.

குறித்த குளம் பூர்த்தியாகும் போது 10 MCM நீரை தேக்க முடியும் என கூறப்படுகிறது. இதன் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது.

மழைநீரை சேமிப்பதன் மூலம் கடல்நீர் உள்வருதல், நிலத்தடி உவர் நீர் மாறும், கால்நடைகளுக்கு மேச்சல் தரை, காட்டு விலங்குகளின் வருகை, பச்சை புற்கள், புதிய காடுகள் உருவாகுதல் உள்ளிட்ட நன்மைகளும் உருவாகும் என கூறப்படுகிறது.

அத்துடன், சுற்று கட்டுகள் அமைப்பதால் வயல் நிலங்களுக்கு நீர் சென்று அழிவுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் திட்டம் வரையப்பட்டுள்ளது. காட்டு விலங்குகள் நீர் தேடி செல்கின்றமையால், காட்டுப் பகுதிகளில் கட்டுகள் மேற்கொள்ளப்படாது.

குடமுருட்டி குளத்தின் கட்டுகள் பலமில்லாதுள்ளது. அவற்றை புதிதாக அபிவிருத்தி செய்யப்படும். இது தவிர, நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டத்திற்கு மேல் பகுதிகளில் உள்ள குளங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். மண்டக்கல்லாறு பகுதியிலும் புதிய கட்டு அமைக்கப்படும்.

இத்திட்டத்தில் வனப பகுதியும், 38 ஏக்கர் வயல் நிலம் உள்வாங்கப்படும். ஆனாலும் புதிய வயல் நிலங்கள் உருவாக்க முடியும். புதிய வயல் நிலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமைப்படுத்தி வழங்க முடியும்.

அத்துடன், 10 ஆயிரம் ஏக்கர் ஏனைய விவசாயம் செய்ய முடியும். தற்போது கடல் நீர் உள்வருகை காணப்படுகிறது. இதனால் பல ஏக்கர் வயல் நிலங்கள் கைவிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகள் குறுகிய காலத்தில் பயிர்ச் செய்கை நிலங்களாக மாறும்.

அப்பிரதேசங்களில் ஏற்பட்ட உவர் பரவல் காரணமாக மக்கள் வெளியேறியுள்ளனர். இத்திட்டத்தினால் 2, 3 வருடங்களுக்குள் மக்கள் மீண்டும் திரும்புவர். இவ்வாறு பல நன்மைகள் இத்திட்டத்தில் உருவாகவுள்ளது என இன்றைய திட்டஅறிமுகத்தில் கூறப்பட்டது.

Related posts: