1000 விகாரை கட்ட வந்தவவரை குதிரையில் ஏற்றி சாமரம் வீசிய கூட்டம் இன்று பறாளை தொடர்பில் கூச்சலிடுவது வெட்கக்கேடானது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 11th, 2023

சுழிபுரம் – பறாளை முருகன் ஆலய தல விருட்சமான அரசமரத்தின் ஆயுட்காலம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப்பெற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில் ஆயிரம் விகாரை கட்டுவேன் என தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பகிரங்கமாக வெளியிட்ட சஜித் பிரேமதாஸவை யாழ்ப்பாணம் வரவழைத்து பரிவட்டம் கட்டி குதிரை வண்டியில் ஏற்றி சாமரம் வீசியவர்கள் இன்று அரசமரத்தின் இருப்பு பற்றி ஆராய்வதாக காட்டிக்கொள்வது மக்களை ஏமாற்றும் வழமையான செயற்பாடுகளில் ஒன்று ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (11.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

அண்மைய நாள்களாக சுழிபுரம் பறாளை முருகன் ஆலயம் உட்பட யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 3 தொல்லியல் திணைக்களத்திற்கு உரிய பகுதியாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமையை தொடர்பில் பல்வேறு கருத்துக்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடு ஐக்கியத்தை பாதிக்கின்றது என எமது கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 07.08.2023 திகதியன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் கலாசார வராலாறுகளை பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியும் நெருப்பிற்கு எண்ணை ஊற்றுவதாக அமையக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்தார். ஆயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து இந்த மரம் 300 வருடங்கள் பழமையானது என்பதால் சங்கமித்தை இலங்கைக்கு 300 வருடங்களுக்க முன்னரே வந்தார். பௌத்தம் 300 வருடங்கள் மாத்திரமா பழமையானது. அல்லது இது சங்கமித்தை நாட்டிய மரமில்லை என்றும் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

இதேசமயம் வடகிழக்கில் பௌத்தத்தை பரப்ப 1000 விகாரை கட்டுவேன் என்பவரையும் பரிவட்டம் கட்டி சாமரம் வீசி ஆரார்தி அழைத்தவர்களும் கூட்டமைப்பினரே.

ஒரு நிலையான கொள்கை இல்லாதவர்களின் இத்தகைய செயற்பாடுகளால் தான் நாட்டில் அநேக குழப்பங்களும் முரண்பாடுகளும் வலுப்பெற்றுவருவதுடன் தீர்வுகள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாமைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

ஆயினும் தொல்லியல் திணைக்களம் எந்தவித விஞ்ஞானபூர்வமான நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்காமல் எப்படி வர்த்தமானி அறிவுித்தல் வெளியிட்டார்கள் என்பது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி துறைசார் தரப்பினருக்கும் பணித்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: