மருந்து தட்டுப்பாடு : வைத்தியர்கள், ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சுகாதார அமைச்சர்!

Monday, August 5th, 2019

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன முற்றாக மறுத்துள்ளார்.

வைத்தியசாலைகளில் எந்தவித மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடில்லை. சில வைத்தியசாலைகளில் பணியாற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த அங்கத்துவ வைத்தியர்கள் மற்றும் சில ஊழியர்கள் அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் மக்களை சிரமங்களுக்கு உள்ளாக்கும் நோக்கில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதான நிலையைத் தோற்றுவித்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.

இவ்வாறான வைத்தியர்களுக்கும், ஊழியர்களுக்கும் எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ரூமி மொஹம்மட் தெரிவிக்கையில் 1,800 மருந்து வகைகள் மத்தியில் 17 வகையான மருந்துகளுக்கு மாத்திரம் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனை மருந்து தட்டுப்பாடாக தோற்றுவிக்கப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும். சில மருந்து வகைகள் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டவை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவைச் சேர்ந்த பதில் உதவிப் பணிப்பாளர் ரொஹான் ஜயவர்த்தன கருத்து வெளியிடுகையில் உரிய தரமற்ற மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக சில இணையத் தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Related posts: