ஜனவரியில் இரணைதீவுக்கான பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை!

Thursday, October 31st, 2019

கிளிநொச்சி இரணைதீவுக்கான பயணிகள் படகுப் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நேர ஒழுங்குகளின் அப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக இரணைதீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இரணை தீவில் 28 வருடங்களுக்குப் பின்னர் கடந்த மே மாதம் முதல் மக்கள் மீள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

இதுவரை 74 வரையான குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளதுடன் தொழில் சார் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் குறித்த பிரதேசத்தில் தங்கி நின்று தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் இரணைதீவுக்கான படகுச் சேவை ஒன்றினை ஏற்படுத்தித் தருமாறு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் இரணைதீவுற்கான படகுச் சேவை இம்மாத முற்பகுதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த மீனவர் சங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தற்போது மீனவர்கள், பொதுமக்கள் வழமை போன்று மீன்பிடிப் படகுகளில் தமது பயணங்களை முன்னெடுக்கின்றனர். இருந்தாலும் பயணிகள் படகில் மேலும் வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  தற்போது தேவைகள் ஏற்படும் போது சேவைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இருந்தாலும் ஜனவரி மாதத்தில் இருந்து ஒழுங்கு படுத்தப்படும் நேர ஒழுங்குகளுக்கு அமைவாக போக்குவரத்துச் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Related posts: