சமூக வலைத்தளங்களில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு : அரசாங்க அதிபரின் அவசர எச்சரிக்கை!

Thursday, December 12th, 2019


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக தனிநபர்கள் நிவாரணபொருட்களை கோரி வருவது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

தனிநபர்கள், வெளிநாட்டில் வசிக்கின்ற புலம்பெயர் தமிழர்களிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் நிவாரணபொருட்களை வழங்குமாறு கோருவது முற்றிலும் தவறான ஒரு செயற்பாடாகவே அவதானிக்கப்படுகின்றது என்றும் அரசாங்க அதிபர் கூறினார்.

இவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்கள் பணம் ஏனையவைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைந்ததாக இதுவரை எங்கும் பதிவாகவில்லை மாவட்ட செயலகத்தினூடாக தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு துரிதமாக செயற்பட்டு பிரதேச செயலாளர்கள் ஊடாக நிவாரண பொருட்களை பகிர்ந்தளிக்கின்ற வேலைத்திட்டம் கிரமமான முறையில் ஒழுங்கமைப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்த அவர், இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட பொதுமக்களுக்கு இரு வாரங்களாக சமைத்த உணவுகளும் நண்பர்கள் உறவினர் வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உலர் உணவு பொருட்களையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

இச் செயற்பாட்டை குழப்புகின்ற அடிப்படையிலே இவ்வாறு சமூக வலைத் தளங்கள், ஊடகங்களூடாக பொதுமக்களிடம் நிதி கோருவது தொடர்பில் மக்களை விழிப்புடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கேட்டுக்கொண்டார்.

Related posts: