இலங்கையில் இன்றுமுதல் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை!

Thursday, August 1st, 2019

இலங்கையில் இன்றுமுதல் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலவச உள்வருகை வீசா வழங்கும் புதிய நடைமுறை அமுலாகிறது.

48 நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச உள்வருகை வீசா வழங்கும் நடைமுறையை சுற்றுலாத்துறை அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறையை பல மடங்கு அதிகரிக்கலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.இதற்காக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதற்கமைய 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 6 மாதங்களுக்கு புதிய வீசா நடைமுறை அமுலில் இருக்கும். இந்தத் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் மேலும் அதனை பல நாடுகளுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்காக இலவச உள்வருகை வீசா வசதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறை தொடர்பான அறிமுக நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்வில் பிரதானமாக பல நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்கள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: