இனவாத யுத்தத்திற்கு தீ மூட்டியவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது ஏன்? – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, November 7th, 2019


திட்டமிட்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி அதனூடாக இனவாத யுத்தத்திற்கு தீ மூட்டியவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க முனைந்துள்ளமையானது தமது அரசியல் இயலாமையின் வெளிப்பாடே என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் (ரங்கன்) தெரிவித்துள்ளார்.

கொடிகாமம் மந்துவில் வடக்கு பொதுமண்டபத்தில் நேற்று மாலை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்;. 

அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்திலேயே யாழ்ப்பாண நூல் நிலையம் தீ மூட்டப்பட்டதுடன், இனவாத தீ பரவியது. அன்று ஐக்கிய தேசியக் கட்சியால் திட்டமிட்;ட இன அழிப்பு நடவடிக்கை பின்னர் 1983 யூலை கலவரத்துடன் தீச்சுவாலையாக கொழுந்துவிட்டு எரிந்தது. அதன் போதே எமது மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறினர்.

ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களுக்குரிய அரசியலுரிமையை அடியோடு மறுத்து நிற்கின்றது. இன்றும் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் ஐந்து கட்சிகள் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பினரால் வழங்கப்பட்ட 13 கோரிக்கைகளைக் கூட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா நிராகரித்துள்ளார். அதன் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்க முனைந்துள்ளமையானது தமது அரசியல் இயலாமையும் அத்துடன் தமது சலுகை அரசியலுக்காகவே அன்றி தமிழ்மக்களின் நலனுக்கானது அல்ல.

நாம் இணக்கஅரசியலின் ஊடாக பல்வேறு விடயங்களை மகிந்த ராஜபக்ச அரசிடமிருந்து மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசிற்கும் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரவர்க்கத்திற்கும் ஆதரவு கொடுத்ததன் ஊடாக தமிழ்மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன என்பதை கூறமுடியுமா?.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் அரசியல் உரிமையென்றும், சமஸ்டியென்றும் தன்னாட்சி என்றும் சுயநிர்ணயம் என்றும் சலுகைக்காக சோரம் போகோம் என்றும் வீராப்பு பேசுவதும், மாவீரர்கள், போராளிகள் கனவுகளையும், நினைவுகளையும் நிறைவேற்றுவோம் என்றும் ஒருபுறம் பேசிக்கொண்டு மறுபுறத்திலே இனவாத தீயை மூட்டி அவர்களுடன் தேனிலவு கொண்டாடுவதும் தமக்கான சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அதற்கு மக்களின் வாக்குகளை கேடயமாக பயன்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எனவே, இந்த இனவாத தீயைமூட்டியவர்களுக்கு ஆதரவளிக்கப் போகின்றோமா? அல்லது இந்த யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்து ஜனநாயக சூழலை உருவாக்கி சமாதானத்தை உருவாக்கி தந்தவர்களுக்கு வாக்களிக்கப் போகின்றோமா என்ற கேள்வி உங்கள் ஒவ்வொருவருக்கும் தோன்றலாம் எனவே நாம் இதில் நிதானமாக சிந்தித்து கூட்டமைப்பின் கபடத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டல்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சகோதரருக்கு தாமரை மொட்டுச் சின்னத்தில் வாக்களித்து எமது அன்றாட பிரச்சினைகளுக்கும், அபிவிருத்திக்கும், அரசியலுரிமைக்கும் தீர்வு காண திடசங்கற்பம் பூண்டு செயற்படுவோம். மத்தியில் தாமரை மலர பங்கு கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

Related posts: