ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணி உத்தியோகபூர்வமாக பிரதேச அமைப்புக்களிடம் கையளிப்பு – சம்பிரதாயபூர்வ கரும்புச் செய்கையும் ஆரம்பித்துவைப்பு!!

Sunday, October 17th, 2021

நீண்ட காலமாக சில தனிப்பட்டவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பின் கீழிருந்துவந்த ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் தற்காலிகமாக பிரதேச பொது அமைப்புக்களிடம் கையளிக்கப்பட்டது.

மேலும், நீண்டகால அடிப்படையில் பாரிய சீனித் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கும் நோக்குடன் இந்தக் காணியில் கரும்புச் செய்கையும் பிரதேச அமைப்புக்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச செயலாளர் பாலசிங்கம் ஜெயகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் இராசலிங்கம் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

ஸ்கந்தபுரம், அக்கராயன், கண்ணகைபுரம், கோணாவில், ஆனைவிழுந்தான் பிரதேசங்களைச் சேர்ந்த 12 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து ஒழுங்குசெய்த இந்த நிகழ்வில், கரைச்சி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் கருணா, நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டு, 196 ஏக்கர் அளவான கரும்புத்தோட்டக் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய 147 ஏக்கர் காணி பொது அமைப்புக்களுக்கு  பிரித்து வழங்கப்பட்டது.

அந்தந்த அமைப்புக்கள் தமது அமைப்பின் உறுப்பினர்களில் காணிகளற்றவர்களுக்கு காணியை உரிய முறையில் பிரித்து வழங்கி இம்முறை காலபோகத்துக்கு மாத்திரம் நெற்செய்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏக காலத்தில், சுமார் 10 ஏக்கர் அளவான காணியில் எதிர்காலத்தில் பாரிய சீனித் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கும் நோக்குடன் கிளிநொச்சி கரும்பு ஆராய்ச்சி நிறுவன பொறுப்பதிகாரி சிவபாலனின் வழிகாட்டலில் சம்பிரதாயபூர்வமாக கரும்புச் செய்கையையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆரம்பித்துவைத்தார்.

மிக நீண்டகாலமாக தனிப்பட்ட சிலரின் ஆக்கிரமிப்பின் கீழிருந்த இந்த கரும்புத்தோட்டக் காணியை பிரதேசத்திலுள்ள காணிகளற்ற மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக பலதரப்பட்ட அரசியல்வாதிகளிடமும், அரச அதிகாரிகளிடமும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் வெற்றியளிக்காத நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தக் காணியை பிரதேச மக்களுக்கே பெற்றுத்தந்திருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருப்பதாக நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.

000

Related posts: