வேலைநிறுத்தம் செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல – புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு சாகல ரத்நாயக்க அறிவுறுத்து!

Sunday, June 9th, 2024

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்று நிருபங்களுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடுவெல பிரதேச மக்களின் நலன்களை ஆராய்வதற்காகவும், அந்த மக்களுக்கான நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவும் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வெள்ளம் வடிந்ததன் பின்னர் மக்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்குத் தேவையான பின்னணியை வழங்க எதிர்பார்ப்பதாக அவரர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நம் நாட்டில் பல்வேறு சம்பள முரண்பாடுகள் உருவாகியுள்ளதாகவும் ஒழுங்குமுறையில் சம்பள ஏற்பாடுகள் செய்யாததாலும், பல்வேறு காலகட்டங்களில் துரித பதில்களை வழங்க நடவடிக்கை எடுக்காதமையே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள முரண்பாடு குறித்து முறையான ஆய்வு நடத்தி அறிக்கை தயாரிக்க கடந்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும், ஆனால் இது மக்கள் சிரமப்படும் சந்தர்ப்பம் என்பதுடன், நாடு பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு, மீண்டும் பொருளாதார ரீதியில் ஸ்திர நிலைமையை அடைந்திருந்தாலும் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, வேலைநிறுத்தம் செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல என்பதால், அனைத்து அரச அதிகாரிகளும் இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டு செயல்படுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் உங்கள் பிரச்சினைகளை நாம் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டோம் எனவும் அதுபற்றிய புரிதல் எமக்கு உள்ளதுடன் அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான வேலைத் திட்டத்தையும் தயாரித்துள்ளதாகவும் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: