மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் புதர்மண்டிக் காணப்படும் பகுதிகள் வேலணை பிரதேச சபையால் துப்பரவாக்கும் பணி ஆரம்பம்!

Saturday, March 9th, 2019

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும் பிரதேச சபையினரால் புதர்மண்டிக் காணப்படும் பகுதிகள் இனங்காணப்பட்டு சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இன்றையதினம் பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகருமூர்த்தி தலைமையில் நடைபெறும் இந்த சிரமதான பணிகளில் வீதியோரங்களில் குறிப்பாக மக்கள் வாழிடங்களை அண்மித்து காணப்படும் உள்ளக வீதிகளில் காணப்படும் பற்றைகள் முதற்கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றன.

பற்றைகள் அதிகரிப்பதனால் நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன் சுகாதார சீர்கேடுகள் கலாசார சீர்கேடுகள் அதிகரித்துவருவதாக தெரிவித்து சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதியில் காணப்படும் புதர்மண்டிக்கிடக்கும் காணிகளை துப்பரவு செய்யவேண்டும் என அண்மையில் குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி அனுஷியா ஜெயகாந்த் அவர்களால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கமைய குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் அதன் முதற்கட்டமாக இன்றையதினம் வேலணை சிற்பனை பகுதியின் வீதியோரங்களில் காணப்படும் பற்றைகளை அகற்றும் பணி சபையால் சிரமதான முறையில் துப்பரவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனிடையே வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பல இடங்களில் இவ்வாறான பற்றைகள் காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்திருந்தமை தொடர்பில் பலதரப்பட்டவர்களால்  சுட்டிக்காட்டப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Related posts: