வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை – அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை!

Monday, March 14th, 2022

பொறியியலாளராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே தனது எதிர்கால இலட்சியம் என 2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் தெரிவித்துள்ளான்.

இன்நிலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளை பெற்ற கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்திய கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர் எஸ். தவராசா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தினார்.

நேற்றிரவு வெளியாகிய 2021ஆம் ஆண்டு தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்ஸன் முதலிடத்தை பெற்றுள்ளான்.

இந்த நிலையில் தமது எதிர்கால லட்சியம் தொடர்பில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தமிழ்ச்செல்வன் கஜலக்ஸன் இவ்வாறு தெரிவித்துள்ளான்.

இதேவேளை! 2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை பேறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பரீட்சை பெறுபேற்றை அறிய முடியும்.

2021ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றது.

குறித்த பரீட்சையில், தமிழ் மொழிமூலம் 85,446 மாணவர்களும், சிங்கள மொழிமூலம் 255,062 மாணவர்களும் என மொத்தமாக 340, 508 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இந்த முறை 20,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதுடன், அவர்களில் 250 விசேட தேவையுடைய மாணவர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான தமிழ், மற்றும் சிங்கள மொழிமூல மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ் மொழிமூலம் 149, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு 148 எனவும் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பதுளை, ஆகிய மாவட்டங்களுக்கு 147 ஆகவும், நுவரெலியா 146, வவுனியா 147 மற்றும் இரத்தினபுரிக்கு 145 ஆகவும் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: