வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதிகளைச் செய்வதற்காக முதலீட்டு முகாமைத்துவ குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்!

Tuesday, February 23rd, 2021

வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதிகள் செய்வதற்காக முதலீட்டு முகாமைத்துவ குழு ஒன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் காணொளியூடாக நடைபெற்றது.

இந்த முகாமைத்துவ குழு திறைசேரியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .

வெளிநாட்டு முதலீட்டை நாட்டில் முன்னெடுப்பதற்காக விரைவான அனுமதி வழங்குவதே இந்த குழுவின் முக்கிய நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முதலீடுகளின் போது சுற்றாடல் பாதுகாப்பு விடயம் கவனத்தில் கொள்ளப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் தொடர்பில் உலக நாடுகளில் பிரச்சினைகள் இருந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முதலீட்டைப் பெறுவதில் போட்டி நிலை இல்லை. எனது குறிக்கோள் முதலீட்டைப் பெற்றுக்கொள்வதே ஆகும். அரசாங்கம் சுற்றாடல் பாதுகாப்பினையும் நாட்டின் அபிவிருத்தியினையும் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இரண்டையும் கருத்தில் கொண்டு நாட்டில் இந்த முதலீடுகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: