வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் – கஃபே அமைப்பு சுட்டிக்காட்டு!

Monday, July 6th, 2020

சமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள கஃபே அமைப்பு அவ்வாறான பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக கரிசனை செலுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் குறிப்பிடுகையில் – “நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நிலைவரங்களை அவதானிக்கும்போது, திகாமடுல்ல மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.

குறிப்பாக திகாமடுல்ல மாவட்டத்தின் பொத்துவில், சாய்ந்தமருது மற்றும் அக்கறைப்பற்று ஆகிய பிரதேசங்களில் கட்சி சார்பாக மற்றும் சுயேட்சையாக வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு தமது தேர்தல் நிலைவரங்கள் தொடர்பாக அறிவூட்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போது, குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. இதானல் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. என தெரிவித்துள்ள அவர்  குறிப்பிட்ட பிரதேசங்களின் பாதுகாப்பை அதிகரிப்பது அவசியம் எனவும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் கஃபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: