விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடக்கு விவசாயிகளுக்கு நிவாரணம் – அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, March 27th, 2024

விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்துப் பணிகளையும் முன்னெடுக்கும் வடமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும்பகுதியை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேநேரம் வடமாகாணத்தில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அந்த பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அவர்கள் விவசாயத்தை கைவிடவில்லை.

எனவே, வட மாகாண விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தும் போது ஓரளவு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைவாக, விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரக் கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அமைச்சரவை யோசனை முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: