விளையாட்டின் மூலமாகக் கணிதம்  – கணித அடைவு மட்டத்தை அதிகரிக்க புதிய திட்டம்!

Thursday, July 19th, 2018

ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தும் வகையில் விளையாட்டின் மூலமாகக் கணிதம் என்னும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்றிட்டத்தை ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் ஆரம்பித்து பாடசாலைகளில் தரம் 11 இல் கற்கும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அது தொடர்பான விளக்கங்களைப் பாட ஆசிரியருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்.

கணித பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பாட அலகுகளையும் படங்களாகப் பதிவு செய்து இவற்றை இணைப்பதன் மூலமாக விடையைக் காண முடியும் என்பது இந்தச் செயற்றிட்டத்தின் கருத்து. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைக் குழுக்களாக அமைத்து அவர்களிடம் பாடரீதியான பாடங்களைக் கையளித்து அவற்றைச் சேர்ப்பதன் மூலமாக கேள்விக்கான விடைகளைக் கண்டறிய முடியும் என்பது தொடர்பான விளக்கங்களைச் செயன்முறை மூலமாகக் காண்பிக்கப்படுகின்றது.

பாட அலகின் ஆரம்பம் தொடங்கி எந்தெந்த முறைகளின் ஊடாக விடையைக் கண்டுபிடிக்க முடியும் என்பது வழங்கப்படும் படங்களில் காணப்படுகின்றன.

குழுவாக ஒன்றிணைந்து இந்தப் படங்களை ஒன்றிணைக்கும் போது சரியான விடை கிடைக்கும். இந்தச் செயற்றிட்டத்தால் கணித பாடத்தில் புரியாத பல விடயங்களைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததென மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் செயற்றிட்டத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் ஆரம்ப நிகழ்வைச் சாவகச்சேரி மகளிர் கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் லலிதமலர் முகுந்தன் ஆரம்பித்து வைத்தார்.

Related posts: