வியாழனன்று இலங்கைக்கு வருகிறது 5 இலட்சம் இந்திய கொவிட்-19 தடுப்பூசிகள்!

Tuesday, January 26th, 2021

இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை அறிவித்துள்ளது.

குறித்த அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகள், எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு கிடைக்குமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொவிட் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கும் வழங்குகின்றமைக்கு இலங்கை அரசு இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கியுள்ளன. அதேபோல இந்தியாவும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

அந்தவகையில் இந்தியாவில் இருந்தும் பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பிரேசில், வங்காள தேசம், பக்ரைன்,  பூட்டான், மாலைத்தீவு, மொரீசியஸ், மங்கோலியா, மொராக்கோ, மியான்மர், நேபாளம்,  ஓமன், சிசெல்லஸ், ஆகிய நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்கின்றது.

இந்நிலையில் இலங்கைக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை, அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.

மேலும், இலங்கையில்  கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றால் கொரோனா அபாய நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை வழங்க பிரதமர் ஆலோசனை!
இலங்கை விவசாயிகள் , பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் நியூசிலாந்து அரசாங்கத்தின...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் அவசியமில்லை - அமெரிக்காவின் புலனாய்வு பிர...