வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – பரீட்சைகள் ஆணையாளர் அதிரடி நடடிவக்கை!

Monday, October 16th, 2023

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த சில மணிநேரங்களுக்குள் சமூகவலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்களை வெளியிட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று காலை 2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. இந்த பரீட்சைக்கு 3 இலட்சத்து 37 ஆயிரத்து 956 பேர் தோற்றியிருந்தனர்.

குறித்த பரீட்சை நேற்று பிற்பகல் 12.15க்கு முடிவடைந்த நிலையில், சில மணி நேரங்களில் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட சில மணித்தியாலங்களுக்குள் அதனை பகிரங்கப்படுத்த வேண்டாம் என பரீட்சை மண்டப பொறுப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை எழுதியதன் பின்னர் வீடுதிரும்பும் மாணவர்கள், மேலும் மன உளைச்சலுக்கு ஆளாவதைத் தடுக்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், அறிவுறுத்தலை மீறி புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே வினாத்தாள்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதால் சில மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், பரீட்சை முடிவடைந்த சில மணித்தியாலங்களில் சமூக ஊடகங்களில் வினாத்தாள்கள் வெளியான போதிலும், பரீட்சையின் இரகசியத்தன்மைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: