விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, May 5th, 2023

விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விசாக பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலை கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஒருவருக்கு மாத்திரம் தேவையான உணவு மற்றும் இனிப்புக்களை வீட்டில் இருந்து எடுத்துச் செல்லுமாறு உறவினர்களிடத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாட்டில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு மேலதிகமாக சிவில் உத்தியோகத்தர்களையும் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக இடம்பெறும் தானசாலைகளில் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக மூவாயிரம் பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 7 ஆயிரத்து 160 தானசாலைகளுக்கு இந்த முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: