வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதியின்றி எவரும் செல்ல முடியாது!

Friday, February 9th, 2018

நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் வாக்காளர்களும் அனுமதி வழங்கப்பட்டவர்களும் மாத்திரமே செல்ல முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்கள், வாக்கெடுப்பு நிலைய பணியாளர் குழுவினர், குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் (மேலதிக பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்ட வேட்பாளர்கள் தமது உள்ளுராட்சி சபைக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல முடியும்). அனுமதி பெற்ற வாக்களிப்பு கண்காணிப்பாளர்கள், வாக்கெடுப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபடும் பொலிஸார் தவிர வேறு எவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்ல முடியாது.

அத்துடன் வாக்களிப்பு நிலைய பகுதிக்கு அருகில் தரித்து நிற்கவோ, கட்சி, வேட்பாளர்களுக்காக அந்தப் பகுதியில் பிரசார செயற்பாடுகளில் ஈடுபடவோ முடியாது.

அதேபோன்று வாக்கெடுப்பு நிலைய பகுதிகளில் தொலைபேசிகளை பயன்படுத்தல், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைதல் என்பனவும் மற்றும் அங்கு புகைப்படங்களை எடுப்பதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை மதுபானம், புகைத்தல் மற்றும் வேறு போதைப்பொருள் பாவனை என்பன வாக்கெடுப்பு நிலைய பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளதுடன், மதுபோதையில் வாக்களிப்பு நிலையத்திற்குள் நுழைவதும் தடை செய்யப்பட்டுள்ளது. தடைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts: