வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்- பிரதமரைச் சந்தித்துப் பேச்சு: போராட்டம் குறித்து நாளை இறுதி முடிவு!

Saturday, May 20th, 2017

அரச வேலைவாய்ப்புக் கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இன்று சனிக்கிழமை 83 ஆவது நாளாகவும் தீர்வின்றி இடம்பெறுகிறது.

இந் நிலையில் நேற்று யாழ். வருகை தந்த இலங்கையின் பிரதமருடன் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர். இந்தச் சந்திப்பில் வேலையற்ற பட்டதாரிகளின் சார்பில் கோரிக்கைக் கடிதமொன்றை பட்டதாரிகளின் பிரதிநிதிகள் பிரதமரிடம் கையளித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் வடமாகாணத்தில் ஆயிரம் பட்டதாரிகளுக்கும், கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், யூலை மாத நடுப்பகுதியில் இதற்கான நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வாக்குறுதி வழங்கினார். மேலும் வடக்கு, கிழக்கில் மூவாயிரம் சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதமரின் கோரிக்கையை ஏற்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தைத் தொடர்வதா? இல்லையா? என நாளை ஞாயிற்றுக்கிழமை காலை-10 மணிக்குப் போராட்டக் களத்தில் கூடி முடிவு செய்யப்படவுள்ளதால் அனைத்துப் பட்டதாரிகளையும் இந்தக் கலந்துரையாடலில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts: