வவுனியாவில் இடமாற்றமின்றி 30 ஆசிரியர்கள் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

வவுனியா வடக்குக் கல்வி வலயப் பிரிவில் குறிக்கப்பட்ட பாடசாலைகளில் மட்டும் 30 ஆசிரியர்கள் 10 வருடங்களுக்கு மேலாக இடமாற்றமின்றிக் கடமையாற்றுகின்றனர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாகத் தெரியவந்துள்ளது.
அதனால் வசதியான பாடசாலைகளுக்கு வேறு ஆசிரியர்கள் இடமாற்றம் பெறுவது கடினமாக உள்ளது. இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. ஆளுநரின் பணிப்புக்கு அமைய வவுனியா வடக்குக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் 10 வருடங்களுக்கும் மேல் கடமையாற்றுபவர்களை உள்ளக இடமாற்றம் செய்யுமாறு அமைச்சின் செயலாளர் வவுனியா வடக்குக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் உயர்தர மாணவர்களின் ஆசிரியர் தேவை மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனும் காரணங்களைக் காட்டி வவுனியா வடக்குக் கல்வி வலயத்தினர் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்ததாவது:
குறித்த ஆசிரியர்கள் அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் செல்வாக்கின் அடிப்படையில் கடமையாற்றுகின்றனர். இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் வலயப் பணிப்பாளர் ஆகியோர் கவனத்தில் எடுத்து தகுந்த தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று கோருகின்றனர். இது தொடர்பில் அமைச்சின் செயலரின் பதிலைப் பெறமுடியவில்லை.
Related posts:
|
|