வலி.வடக்கில் மக்களுக்கான கட்டிட அனுமதி வழங்கப்படாததால் வீட்டுத் திட்டத்தில் தாமதம்!

Friday, December 23rd, 2016

வலி. வடக்குப் பகுதியில் மீளக்குடியமரும் மக்களிற்கான வீட்டுத்திட்டத்திற்கான கட்டிட அனுமதியினை பிரதேச சபை வழங்க ஏற்படும் தாமதம் காரணமாக இறுதிக் கட்ட 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

இது தொடர்பில் குறித்த பிரதேச சபைக்குட்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவிக்கையில்,

வலி. வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேறும் மக்களிற்கு மாவட்டச் செயலகம் ஊடாக மீள் குடியேற்ற அமைச்சின் 8 லட்சம் ரூபா பெறுமதியிலான வீடுகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் பணத்தினைக்கொண்டு நாம் வீடுகளை அமைக்கும்போது 10 லட்சத்தினைத் தாண்டுகின்றது. இருப்பினும் எமக்காக ஒதுக்கப்பட்ட பணத்தினில் தொழிநுட்ப உத்தியோகத்தர்களிற்கான செலவுப் பணமாக 16 ஆயிரம் ரூபா கழிக்கப்பட்டு எஞ்சிய தொகையே வழங்கப்படுகின்றது.

இந் நிலையில் எம்மால் அமைக்கப்படும் வீடுகளின் கட்டிட அனுமதியினை பிரதேச சபையில் பெற்று வழங்கப்படவேண்டும் . கட்டிட  அனுமதிக்காக நாம் விண்ணப்பித்து பல மாதங்கள் கடந்தபோதும் இன்று வரைக்கும் கிடைக்கவில்லை. குறித்த அனுமதியினை பெற்று  வழங்காத காரணத்தினால் எமது  வீட்டுத்திட்டக் கொடுப்பனவில் 50 ஆயிரம் ரூபா இன்னும் விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பில் பிரதேச சபைக்கும் தெரியப்படுத்தியுள்ளோம் இருப்பினும் எமக்கான கட்டிட அனுமதிகள் கிடைக்காத காரணத்தினால் மிகுதி 50 ஆயிரத்தினைப்  பெறமுடியவில்லை  எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வலி. வடக்குப் பிரதேச சபையின் செயலாளரைத் தெரிவிக்கையில்

வலி. வடக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி தற்போதே அபிவிருத்தி கண்டுவரும் பகுதியென்பதனால் அதிக அனுமதிகள் கிடைக்கின்றன. அவ்வாறு கிடைக்கும் காலத்திற்கேற்ப பரிசீலித்து உரிய ஆவணங்களின் பிரகாரம் வழங்கப்படுகின்றன. பல விண்ணப்பங்களிற்கு போதிய ஆவணங்கள் இன்மையாலும் தாமதம் ஏற்படுகின்றது. இதேவேளை மீள்குடியேற்ற வீடுகளில் மட்டும் சுமார் 800 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அதனால் அவர்களின் நன்மைகருதி இந்த ஆண்டு கணக்குகள் சீர்செய்யப்பட்டதும் கிராமசேவகர் பிரிவு ரீதியாக நடமாடும் சேவைகளை நடாத்தி உடனடியாகவே வழங்க ஒழுங்குகள் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்தார்.

ra (8)

Related posts: