வலி கிழக்கில் பொது மைதானம் – அமைச்சர் டக்ளஸிடம் விடுக்கப்பட்டது கோரிக்கை – ஏதுநிலைகள் குறித்து நேரில் ஆராய்வு!

Thursday, June 13th, 2024

வலிகாமம் கிழக்கில் இளைஞர்களின் விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் வகையில் பொது மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு அப்பகுதிய இளைஞர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக   அதற்கான ஏதுநிலைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் அடங்கிய பிரதிநிதிகள் கள ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளனர்.  

இதன் முன்னேற்பாடாக ஏற்கனவே 1999 களில் அன்றைய வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக இருந்த பூதன் குணசிங்கத்திடம் அன்றயை காலகட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு வல்லைவெளிப் பகுதியில் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்று புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக இருந்த சூழ்நிலையை பயன்படுத்தி அவரது நிதி ஒதுக்கீட்டில் வல்லைவெளிப் பகுதியில் உருவாக்கப்பட்டுவந்த பொது விளையாட்டு மைதானப் பணிகள், அதன்பின்னரான ஆட்சி மாற்றங்கள் மற்றும் நாட்டின் சூழ்நிலைகள் காரணமாக நிறைவுறாதிருந்தது

இந்நிலையில் தற்போது குறித்த மைதானத்தின் கட்டுமாணப்பணிகளை முழுமையாக்கி  தருமாறு பிரதேச இளைஞர்கள் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

குறித்த கோரிக்கையின் தேவைப்பாட்டை கருத்திற்கொண்ட அமைச்சர் அதன் நிலைமைகள் குறித்து ஆராய்ந்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகத்தினரிடம் பணித்திருந்தார்.

இதற்கமைய இன்றையதினம் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று மைதானத்தின் நிலைமைகளை அவதானித்து ஆராய்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: