வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருவதனால் மக்களுக்கான கட்சியின் பணிகள்  திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன –  ஜெயா

Sunday, May 8th, 2016

எமது வரலாற்றை மீட்டுப்பார்க்கும்போது மிகவும் ஆழமாகவும் ஆணித்தரமாகவும் பேசவேண்டிய விடயங்கள் பல உள்ளன. வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருவதனால் எமது கட்சி மக்களுக்காக  பட்ட வலிகள் எல்லாம் மறைக்கப்பட்டு விட்டன. குறிப்பாக 90 களிலிருந்து தீவக மக்களுக்காக நாம் பட்ட கஷ்டங்கள் ஏராளம். மாயாஜாலம் காட்டும் ஊடகங்களின் கைகளில் அரசியல் தவழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நாம் மக்களுக்கான பணிகளை செய்து கொண்டிருந்தமையால் எமது கருத்துக்களை வெளிக்கொண்டுவர முடியாத சூழல் இருந்தது. இவற்றை எல்லாம் வெற்றிகொண்டு; எமது கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம் என்றால் எமது மக்கள் தொடர்ந்தும்; செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தாவின் பின்னால் அணிதிரண்டுகொண்டிருக்கின்றார்கள் என்பதையே பறைசாற்றி நிற்கின்றது  என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஜேர்மன் அமைப்பாளர் மார்ட்டின் ஜெயா தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் முதல்நாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தம் அவர் உரையாற்றுகையில் –

பகுத்தாய்வு செய்ய முடியாதவர்களாக இந்த சமூகம் தொடர்ந்தும் இருப்பதையிட்டு சமூகத்தின் மீது எனக்கு கோபமுள்ளது. எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பாதங்கள் படாத இடம் யாழ். மாவட்டத்தில் இருக்க முடியாது. ஆனால் அவற்றையெல்லாம் உடைத்துக்கொண்டு நாங்கள் செய்த பணிகள் வகையில் சுயலாப அரசியல்வாதிகளால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன.

பாதை முழுவதும் மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் பயணித்தவர்கள். நாங்கள் பயணம் செய்த பாதைகளில் மற்றவர்கள் இன்று பயணித்துக்கொண்டு, அதேவழியைப் பின்தொடர்ந்துகொண்டு ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்டதாக கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாயாஜாலத்திலிருந்து தமிழ் மக்கள் விடுபட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் வாக்குகளை அள்ளி பாராளுமன்றம் சென்று இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தனுக்கு மக்களுடைய பிரச்சினைகளோ தேவைகளோ தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்காது. தமிழ அரசியல் கைதிகளின் விடுதலை என்பது இன்று  நாம் தொடங்கிய பணி அல்ல. 90களிலிருந்து தோழர் டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு நீண்டதூர பணி அது. உதாரணம் கூறுவதானால் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் உட்பட புதிய மகசீன் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளாக இருந்த 11 பேரை விடுவித்து தனது பணியை ஆரம்பித்தவர் டக்ளஸ் தேவானந்தா.

சர்வதேச ரீதியில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் என்று நோக்கும்போது தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதனூடாக தாயகத்திலுள்ள எமது மக்களுக்கான பல்வேறுபட்ட  சேவைகளைச் செய்திருக்கிறோம். இற்றைவரை தொடர்ந்துகொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக கொல்லப்பட்டவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் ஈ.பி.டி.பியினரால் கொல்லப்படுவதாக, கடத்தப்படுவதாக சர்வதேச ஊடக அமைப்புகள் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது இலங்கையில் இடம்பெறும் கொலைகளை நிறுத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் மட்டுமன்றி ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.

மேலும் வத்திக்கான் முதல் அனைத்துத் தூதரகங்கள் வரை எமது மக்களின் பிரச்சினைகளை எமது மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளை சர்வதேச பிராந்தியங்கள் சார்பாக எடுத்துச் சென்றிருக்கின்றோம்.

எதிர்காலத்தில் எமது மக்களின் கல்வி, பொருளாதார, வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலான பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் இன்றுவரை மிகவும் ஆணித்தரமான தீர்மானங்களுடன்; இருக்கின்றோம்;.

கல்விசார்ந்த புத்தகங்களை மிக இலகுவான முறையில் கொண்டு வந்து அனைவரதும் பயன்பாட்டிற்கு வழங்குவதற்காக யாழ்ப்பாணத்தில் மின்னியல் நூலகம் ஒன்றை நிறுவுவதற்கான திட்டமும் ஏற்கனவே எம்மால் வரையப்பட்டுள்ளது. இவைகளை நடைமுறைப்படுத்துவது தான் எமது நோக்கம்.

எந்தத் தடைகள் வந்தாலும் யார் இடையூறுகளை ஏற்படுத்தினாலும்; எமது பணிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களைப் பலப்படுத்திக்கொண்டு எமது இறுதி இலட்சியத்தை அடையும்வரை கட்சியின் கொள்கைகள் வெற்றிபெறும் வரை எமது பயணம் தொடரும் என தெரிவித்தார்.

ff3bfbdb-3293-4b93-88cb-e18cbcf4c62e

Related posts: