வயதான தமது பெற்றோருக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்க பிள்ளைகள் அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் – தவநாதன் கோரிக்கை!

Tuesday, September 7th, 2021

கொரோனா நோய்த் தொற்றிலிருந்தும், உயிராபத்திலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளை அனைவரும் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான தவநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரேனா தொற்று ஆபத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே வழிமுறை தடுப்பூசிகள்தான். இலங்கை முழுவதும் இப்போது தடுப்பூசி வழங்கல் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கை முழுவதும் மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் தடுப்பூசி வழங்கலை மேற்கொண்டுவரும் அரசாங்கம், வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கவென கடந்த ஜுலை மாதம் ஒரு தொகுதி தடுப்பூசிகளை, இலங்கையின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே தமிழ் அமைச்சருமான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்திருந்தது.

இந்தத் தடுப்பூசிகள் உடனடியாக வடக்கு, கிழக்கு முழுவதிலுமுள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கவென பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

இதில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஜுலை மாத ஆரம்பத்தில் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இரண்டாவது தொகுதி தடுப்பூசியாக 65 ஆயிரம் தடுப்பூசிகள் கிளிநொச்சி மாவட்டத்துக்குக் கிடைத்துள்ள நிலையில், உடனடியாக அவற்றை இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்.தவநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேநேரம் கடந்த தடவை முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியையும், இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தவறாமல் முதலாவது தடுப்பூசியையும் பெற்று தம்மையும், ஏனையவர்களையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தவநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

50 வயதுக்கும், 80 வயதுக்கும் இடைப்பட்ட அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினரே கொவிட் காரணமாக அதிகளவில் மரணித்திருப்பதால், இந்த வயதுப்ப பிரிவினர் தவறாது அச்சமின்றி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்த தவநாதன், இந்த வயதுப் பிரிவுக்குட்பட்ட தமது பெற்றோருக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு பிள்ளைகள் அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், வெளியே நடமாட முடியாத நிலையிலுள்ளவர்களுக்கு வீடுகளுக்கு வந்தே தடுப்பூசி வழங்க சுகாதாரப் பிரிவினர் தயாராக உள்ளனர் என்றும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: