வட மாகாண முதலமைச்சருக்கு சறுக்கினது சாட்டு!

Sunday, April 9th, 2017

“அரசாங்கம் தருகின்றது என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று வட மாகாண முதலமைச்சர் கூறியிருப்பதானது, “ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை” என்று கூறிய கதையாகவே இருக்கின்றது.

வடக்கு மாகாணசபையின் 90 ஆவது அமர்வின்போது மத்திய அரசின் சார்பில் பொருளாதார மற்றும் அபிவிருத்தி சார்ந்து முன் வைக்கப்படும் பரிந்துரைகளை வடக்கு மாகாணசபை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பதாக மத்திய அரசாங்கத்தால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கே முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அன்மையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் இந்திய அரசின் உதவியுடன் பயிற்சி பாடசாலை ஒன்றை அமைப்பது மற்றும். இரணைமடுவில் 50 மில்லியன் ரூபா செலவில் தாவரவியல் பூங்கா ஒன்றை அமைப்பது போன்ற திட்டங்களை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து வடக்கு மாகாணசபை முன்னெடுப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கே முதலமைச்சர் அவ்வாறு பதிலளித்துள்ளார்.

மத்திய அரசாங்கம் போதைப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரும்படியோ, வட மாகாணத்தின் வளத்தை இரவோடு இரவாக சுரண்டி தென் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யுமாறோ மத்திய அரசாங்கம் திட்டத்தை முன்வைத்திருந்தால் அதை வடக்கு மாகாணசபை நிராகரித்திருந்தால் அதை வரவேற்கலாம்.

பொருளாதார அபிவிருத்தியோ, பௌதிக அபிவிருத்தியோ வட மாகாண மக்களுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தப்போவதில்லை என்பதை முதலமைச்சர் ஆராய்ந்து தெரிந்து கொள்வது நல்லது. அல்லது மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் என்ன? அதை நிராகரிக்கக் காரணம் என்ன? அத்திட்டங்களால் வட மாகாணத்திற்கு ஏற்படக்கூடிய பாதகங்கள் என்ன? என்பதை முதலமைச்சர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசினாலோ, வெளிநாட்டு அரசுகளினாலோ எமது மக்களுக்கு பொருளாதார மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்வைக்கப்படுமானால் அத்திட்டங்களை நிராகரிக்காமல், துறைசார்ந்த நிபுனர்களுடன் ஆராய்ந்து அதனால் ஏற்படக்கூடிய பாதகங்களை தவிர்த்து, சாதகங்களை முன்னிலைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதே அறிவார்ந்த செயற்பாடாகும்.

இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர்த் திட்டம், வவுனியா பொருளாதார மத்திய நிலையம், மருதங்கேணி நன்னீர் குடிநீர்த் திட்டம் போன்ற திட்டங்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளாமல், அதைச் சிதைத்து நிராகரித்துவிட்டதால் இன்று அந்தத் திட்டங்களின் பயன்களை வடக்கு மக்கள் அனுபவிக்கவில்லை என்பதையும் வடக்கு மக்கள் மறந்துவிடவில்லை.

வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களால், தமக்கு முன்பாக வைக்கப்பட்ட பயனுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் தெரியவில்லை. பயனுள்ள திட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்தும் இயலுமையும் இவர்களுக்கு இல்லை என்பது உலகறிந்த பரகசியமாகவே இருக்கின்றது.

Related posts: