வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியாகப் போராடத் தீர்மானம்

Monday, May 22nd, 2017

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதென முடிவு செய்துள்ளனர்.

இந்த மாதம்-18 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்த இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் பிரத்தியேகமாகச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது வடமாகாணத்தில் ஆயிரம் பட்டதாரிகளுக்கும், கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் பட்டதாரிகளுக்கும் யூலை மாத நடுப்பகுதியில் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், இதனையடுத்து வட- கிழக்கில் மூவாயிரம் சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமரால் எமக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது.

இந்த வாக்குறுதியை ஏற்று வேலையற்ற பட்டதாரிகள் தமது போராட்டத்தைக் கைவிட வேண்டுமெனப் பிரதமரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் பிரதமர் வழங்கிய வாக்குறுதியை ஏற்றுத் தமது போராட்டத்தைத் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல்-12 மணி முதல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவுள்ள போராட்டக் களத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் இறுதியில் பிரதமரின் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதுடன், வடமாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் வரை தமது போராட்டத்தைத் தொடர்ந்தும் சுழற்சி முறையில் முன்னெடுப்பதென வேலையற்ற பட்டதாரிகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts: