வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு – யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் எச்சரிக்கை!

Saturday, November 5th, 2022

யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3000-க்கும் மேற்பட்டநீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் மிக அண்மைய தரவுகளின் படி கொழும்பு மாகாணத்தில் குறிப்பாக மேல் மாகாணத்தில் 30% சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15% சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நீரழிவு நோய் தொடர்பிலான ஆய்வுகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கொவிட் காலப் பகுதியில் இளைஞர் யுவதிகள் அதாவது 20 – 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

உலகளாவிய ரீதியில் அதிகரிப்பது போல வளர்முக நாடுகளில் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் நீரழிவு நோயின் தாக்கமானது அதிகரித்துள்ளது.

நவம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு விழிப்புணர்வு வாரமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. குறிப்பாக இந்த உலக நீரிழிவு விழிப்புணர்வு வாரத்தில் யாழ் மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

மிக முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது.

குறிப்பாக தவறான உணவு பழக்க வழக்கங்கள், அப்பியாசம் அற்ற வாழ்க்கை முறை என்பன மிக முக்கியமான காரணங்களாகவுள்ளன.

அதேபோல் மன அழுத்தம், நித்திரை குறைவு போன்ற பல காரணங்களும் இதற்கு ஏதுவாக அமைகின்றன.

ஆகவே நீரிழிவு விழிப்புணர்வு மாதத்தில் மக்களுக்கு நீரிழிவு நோய் என்றால் என்ன என்பது தொடர்பான விழிப்புணர்வு அவசியமாகும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: