வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழமுக்கம் – மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை – இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிக்க துரித தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!

Monday, November 8th, 2021

வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வளர்ச்சியடைந்து வடக்கு மாகாண கடற்கரையை நோக்கி நகருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால், இன்று மாலைமுதல் மறு அறிவித்தல் வரை தென்கிழக்கு வங்கக் கடலில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடற்படைக்கு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, நாட்டின் பல இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென்றும் அத்திணைக்களம் எதிர்வகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இந்நிலையில்

நாட்டில் வரும் நாட்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தத்திற்கு முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் அறிவிக்க முடியுமென அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அத்துடன்இந்த சேவை 24 மணி நேரமும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: