வடக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு!

Sunday, July 10th, 2016

இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பில் இரண்டு நாட்கள் மீன்பிடித்தொழிலை செய்வதற்கான கோரிக்கையினை நிராகரிக்க வலியுறுத்தி வடபகுதி மீனவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் எம்.என்.ஆலம் இன்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் வாரத்தில் இரு நாட்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள அனுமதி கோரியுள்ளனர், இதற்கு வடபகுதி மீனவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவுகள் எடுக்கப்படுமென அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடபகுதி மீனவர்கள் இன்று சனிக்கிழமை காலை வவுனியா மாவட்டத்தில் இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதி கோரியமை குறித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

அந்த கலந்துரையாடலின் போது, மீனவ சங்க பிரதிநிதிகள் அனைவரின் தீர்மானத்திற்கு இணங்க, இந்திய மீனவர்களின், வடபகுதி கடற்பரப்பில் மீன்பிடி தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதியினை இரத்துச் செய்ய வலியுறுத்திய அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குவதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்ட தினத்தன்று வடபகுதி மீனவர்கள் அனைவரும் தமது தொழினை புறக்கணிக்கவுள்ளதாகவும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொழிலினை கண்டித்தும், இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: