வடக்கு மாகாணத்திலிருந்து 18 ஆயிரத்து 448 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்!

Friday, August 3rd, 2018

எதிர்வரும் 6 ஆம் திகதி ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. இதில் வடக்கு மாகாணத்திலிருந்து 18 ஆயிரத்து 448 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

பாடசாலைப் பரீட்சார்த்திகள் 14 ஆயிரத்து 271 பேர், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 4 ஆயிரத்து 177 பேர் என மொத்தம் 18 ஆயிரத்து 448 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்று மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு இணைந்த கணிதம் மற்றும் சமயம் சார்ந்த நாகரிக பாடங்களின் பகுதி ஒன்றுக்கான பரீட்சைகளுடன் ஆரம்பமாகும் பரீட்சைகள் 22 நாள்கள் நடைபெற்று செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை நிறைவடையும்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் I, யாழ்ப்பாணம் II , கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மொத்தம் 6 பிராந்திய நிலையங்களில் விடைத்தாள்கள் சேகரிக்கப்படவுள்ளன. 6 பிராந்தியங்களிலும் மொத்தம் 48 ஒருங்கிணைப்பு நிலையங்களும் 152 பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றில் யாழ்ப்பாணம் 1 இல் 4 ஆயிரத்து 90 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் ஆயிரத்து 272 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 5 ஆயிரத்து 362 பரீட்சார்த்திகளும் யாழ்ப்பாணம்II இல் 4 ஆயிரத்து 214 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 749 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 4 ஆயிரத்து 963 பரீட்சார்த்திகளும் கிளிநொச்சியில் ஆயிரத்து 473 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 512 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தம் ஆயிரத்து 985 பரீட்சார்த்திகளும் முல்லைத்தீவில் ஆயிரத்து 266 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 385 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தம் ஆயிரத்து 651 பரீட்சார்த்திகளும் வவுனியாவில் ஆயிரத்து 788 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 719 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 2 ஆயிரத்து 507 பரீட்சார்த்திகளும் மன்னாரில் ஆயிரத்து 440 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 540 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தம் ஆயிரத்து 980 பரீட்சார்த்திகளும் என 18,448 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சைக்கு குறித்த நேரத்தில் சமூகமளிக்க வேண்டும் அத்துடன் பரீட்சை மண்டபத்துக்குள் அலைபேசி, கணித்தற்பொறி, அழிமை மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்கள் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: