வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் அதி கூடிய வெப்பநிலை பதிவு – நிலைமையை உணர்ந்து நீர்ப் பயன்பாட்டை மேற்கொள்வது அவசியம் என பிரதீபராஜா வலியுறுத்து!

Tuesday, March 19th, 2024

வடக்கு மாகாணத்தின் நேற்றைய (18.03.2024) வெப்பநிலை சராசரி 31 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நாளின் அதி கூடிய வெப்பநிலை ( Maximum Temperature) 36 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இதேநேரம் உணரக்கூடிய வெப்பநிலை( Feel Temperature ) 34 பாகை செல்சியஸ் ஆக இருந்துள்ளது. இந்த நிலைமை அடுத்து வரும் நாள்களில் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நாகமுத்து பிரதீபராஜா   தெரிவித்துள்ளார்..

அதேவேளை நேற்று (18.03.2024) காலை 6.00 மணிமுதல் இன்று (19.03.2024) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்தில் வடக்கு மாகாணத்தின் சராசரி ஆவியாக்க அளவு 11 மி.மீ. ஆகும். சில இடங்களில் சராசரியை விட மிக உயர்வாக பதிவாகியுள்ளது. எனவே ஒரு நாளின் ஆவியாக்க அளவே, 11 மி.மீ. என்றால் ஒரு மாதத்தின் 30 நாளுக்கான ஆவியாக்க அளவு 330 மி.மீ. ஆகும். 

இதேவேளை நேற்றையதினம் வடக்கு மாகாணத்தின் சராசரி சாரீரப்பதன் 68 வீதமாகும். இவ்வாண்டு மார்ச் மாதம் இதுவரை 1 மி.மீ. மழை கூடக் கிடைக்கவில்லை. எதிர்வரும் 21, 22,23, மற்றும் 24 ஆம் திகதிகளில் வெப்பச்சலன செயற்பாட்டால் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட மார்ச் 28 முதல் ஏப்ரல் 8 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

இதேவேளை திர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கடும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடுமையான ஆவியாக்கம்  எமது தரை மேற்பரப்பு மற்றும் தரைக் கீழ் நீர்நிலைகளின் நீரின் அளவை கணிசமான அளவு குறைக்கும்.

ஆனால் நம்மில் ஒருவரும் இந்த மாற்றத்தை கருத்தில் கொள்ளவில்லை. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் அதிகளவு நீர் நிறைந்திருக்கும் மாரியிலும் பார்க்க கோடையில் நாம் அதிகளவு நீரைப் பயன்படுத்துகின்றோம். அதிகளவு விரயமும் செய்கின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தரைக்கீழ் நீரின் அளவு சடுதியாக குறைவடைந்து செல்கின்றது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னரே தரைக்கீழ் நீரை மீள் நிரப்பக்கூடிய கன மழைக்கு வாய்ப்புண்டு.

எனவே நிலவுகின்ற வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நீர் விரயத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

தற்போது எமது கிணறுகளில், குளங்களில் உள்ள நீரையே நாம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை பயன்படுத்த வேண்டும். வடக்கு மாகாணத்தில் செப்டெம்பர் மாதம் வரையான காலம் மழை குறைவான கோடை காலமாகும். எனவே நிலைமையை உணர்ந்து எமது நீர்ப் பயன்பாட்டினை மேற்கொள்வது சிறந்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: