வடக்கு மருத்துவர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் – மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Saturday, May 26th, 2018

இனியும் நொண்டிச்சாட்டுகள் கூறி கால இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுமெனின் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடர் வேலை நிறுத்தத்தில் நாம் ஈடுபடுவோம் என்று வடக்கு மாகாண மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

ஏனைய மாகாணங்களில் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டபோதும் வடக்கு மாகாண அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் தமக்கு கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை என வடக்கு மாகாண அரச மருத்துவர்கள் கடந்தவாரம் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.

அவர்கள் தமது கொடுப்பனவை ஏலவே ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஏனைய மாகாணங்கள் வழங்கியது போல வழங்குமாறும் குறையை நிரப்புவதற்காக மேலதிக கோரிக்கையை திறைசேரியிடம் சமர்ப்பித்துக் குறையை ஈடுசெய்யுமாறும் கோரி இருந்தனர்.

எனினும் அந்தக் கோரிக்கை நிதிப் பிரமாணங்கள் விளங்காமல் விடப்பட்ட கோரிக்கை என மாகாணசபை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மருத்துவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

எனினும் தற்போது மத்திய திறைசேரி, ஏலவே உள்ள நிதியைக் கொண்டு கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச மருத்துவர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாது நிலுவையில் காணப்பட்ட நிலையில் நிலுவையில் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவை இந்த வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே மாகாண திறைசேரியில் இருந்து இந்த வாரத்துக்குள் மருத்துவர்களுக்கான நிலுவையில் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று நேற்று முன்தினம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜி.குணசீலன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இந்த வாரம் கொடுப்பனவுகளை வழங்கத் தவறும் பட்சத்தில் திட்டமிட்டவாறு எதிர்வரும் 28 ஆம் திகதி போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Related posts: