வடக்கு கிழக்கை புரட்டி எடுத்த புரவி சூறாவளி – திருகோணமலையில் பல பகுதிகளிலும் மக்கள் பாதிப்பு

Thursday, December 3rd, 2020

புரவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து திருகோணமலை மாவட்டத்தின்  பல பகுதிகள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.

பல பிரதேசங்களில் அடித்த பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் சேதங்களும் விளைவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் திருகோணமலையை அண்டிய கடற் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பும் பாரிய அலையும் வழமைக்கு மாறாக உள்ளது.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி திருகோணமலை மாவட்ட செயலகம் ஊடாக பல முன்னெடுப்புக்கள் தற்போது வரை இடம் பெற்று வருகிறது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 24 மணி நேர சேவையில் ஈடுபட்டு வருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா, மூதூர், குச்சவெளி, தம்பலகாமம், திருகோணமலை உள்ளிட்ட 11 பிரதேச பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களுக்காக பிரதேச செயலாளர் ஊடாக முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக வீதி ஓரங்களில் நீர் வடிந்தோட முடியாமலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை என்பனவற்றை இலகுபடுத்த உள்ளூராட்சி மன்றங்கள்,பிரதேச செயலகங்கள்,முப்படையினர்கள் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேவேளை முல்லைத்தீவு நகரிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.

இதில் வட்டுவாகல் பாலம், செல்வபுரம் பகுதியிலான வீதிகள் இந்த நிலமை காணப்படுகின்றபோதும் கேப்பாபுலவு முல்லைத்தீவு வீதியே தற்போது தப்பியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரு வீடுகளின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் இரு வீடுகளும் சேதமடைந்தன. இதனால் இரு குடும்பங்களும் இடப்பெயர்வை சந்தித்துள்ளன. இதேபோன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக மழை தொடர்ந்தவண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: