வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறாது – பாதுகாப்பு செயலாளர்!
Friday, December 9th, 2016
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தாலும் அதிகபட்ச தேசிய பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை அங்கு நிறுத்துவதே காலத்தின் தேவையென ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அரசியல் அழுத்தங்கள் மட்டுமே இராணுவத்தினரை வெளியேற்றுமாறு கோருகின்ற போதிலும், வட,கிழக்கு மக்கள் இராணுவம் தேவை என்பதையே கூறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அபே லங்கா அமைப்பு ஊடாக கிளிநொச்சி பூநகரி பகுதிகளில் வறுமையின் கீழ் வாழ்கின்ற ஒருசில மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஓரங்கமாக அப்பகுதியிலுள்ள குடும்பங்களுக்கு சூரிய சக்தியினால் இயங்கும் இயந்திரம் கையளிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்றைய தினம் இரவு நடைபெற்றது. இதில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், “வடபகுதியில் சமூக, அரசியல் மற்றும் ஜீவநோபாய வலுவூட்டல்கள் மேற்கொள்ள அவசியமாகியிருக்கின்றது. தனியார்துறை மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவியின்றி இதனை இராணுவமும், பாதுகாப்பு அமைச்சும் தனித்து பூர்த்தி செய்ய முடியாது. எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டுமென பல்வேறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வட,கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற மக்களிடம் கேட்டுப்பார்த்தால் அவசர நிலைமை, அனர்த்த வேளைகளில் உதவித அவர்களுக்கு இராணுவம் தேவைப்படுகிறது என்றே கூறுகின்றனர். எனவே அனர்த்த முகாமை மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக அப்பகுதிகளில் அதிகபட்ச தேசிய பாதுகாப்பிற்காக இராணுவத்தை அங்கு வைத்திருப்பது அவசியமாகும்” – என்றார்.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், வடக்கில் இராணுவத்தினர் வசமிருக்கும் மேலும்பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
“இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 4600 ஏக்கர் பகுதி கடந்த ஒருவருடகாலப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. இராணுவம் வசமிருக்கும் இன்னும் பல ஏக்கர் காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படவுள்ளன. குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டால் அதில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்க முடியும். அத்துடன் வடக்கில் விவசாயிகள், மீனவர்கள் இதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்” – என்றார்.
அபே லங்கா அமைப்பின் ஊடாக முதலாவது பயனாளியாக தெரிவாகிய பூநகரியைச் சேர்ந்த முன்னாள் போராளியான ராஜினி, டிரொய் தம்பதியினர் குறித்த அமைப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.

Related posts:
|
|
|


