வடக்கில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!

Thursday, January 24th, 2019

வடக்கின் மிகப்பாரிய நுகர்வோர் வர்த்தக கண்காட்சி 10ஆவது தடவையாக நாளை(25) ஆரம்பமாகி மூன்று தினங்கள் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கை மாநாட்டு அலுவலகம் மற்றும் யாழ்.மாநகர சபை சர்வதேச வர்த்தக மன்றம், ஆகியவற்றின் ஆதரவுடன், யாழ்ப்பாணம் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

சுமார் 350க்கும் மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. உள்ளூர் மற்றும் சர்வதேச உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் காட்சிக்கூடங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அத்தோடு, இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நிலவரம் காரணமாக இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் உட்பட உற்பத்தியாளர்களின் காட்சிக் கூடங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சியில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்வையிட்டமையினால், இந்த வருடமும், 60 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாகவும், கண்காட்சி நடைபெறும் 3 தினங்களும் பாடசாலை மாணவர்கள் இலவசமாக கண்காட்சி கூடத்தைப் பார்வையிட முடியும்,

தொழில் வழிகாட்டி சேவைகள், விசேட உணவு வகைகள், மருத்துவ ஆலோசனைகள், கட்டட நிர்மாணப் பொருட்கள், அழகுக்கலை, அழகு சாதனப் பொருட்கள், உள்ளூர் உற்பத்திகள் எனப் பல்வேறு உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் நாளைமறுதினம்(25) காலை 9.30 மணியளவில், யாழ்.பொது நூலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, யாழ்.மாநகர சபை வளாகத்தில் கண்காட்சிக் கூடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக, யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல்ஆர்னோல்ட் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts: