வடக்கில் இராணுவம் இருக்க மக்கள் விரும்புகின்றனர் கூட்டமைப்பு மட்டுமே அகற்றக் கோருகிறது – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவிப்பு!

Friday, September 9th, 2022

வடக்கில் இராணுவத்தினர் இருக்க வேண்டியது அவசியமென தமிழ் மக்கள் விரும்பும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே இராணுவத்தினரை அங்கிருந்து அகற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கூறி வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேக்கர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சமூக பாதுகாப்பு வரி தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன், வடக்கில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளை தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளிக்கையிலேயே சரத் வீரசேக்கர எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சரத் வீரசேக்கர எம். பி அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

வடக்கில் யுத்தம் நிலவிய காலத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பு காரணங்களுக்காக கைப்பற்றிய காணிகளில் 90 வீதமானவை உரிய மக்களுக்கு மீளக் கையளிக்கப்பட்டுவிட்டன.  மிகுதி காணிகளே பாதுகாப்புத் தரப்பினரிடம் உள்ளன. இராணுவத்தினர் மக்களுக்கான நலன்புரி விடயங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இராணுவத்தினர் அங்கு இருப்பது யாழ். மக்களுக்கு அவசியமாகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாத்திரமே இராணுவத்தினரை அங்கிருந்து நீக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: