வடக்கின் உணவுகளில் விலைகள் திடீர் அதிகரிப்பு – பொதுமக்கள் பெரும் சிரமம்!

Friday, August 21st, 2020

வட மாகாணத்தில் உள்ள உணவகங்களில் குறிப்பிட்ட உணவுகளுக்கு சடுதியான விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் உணவகங்களில் உளுந்து வடை மற்றும் தோசை சாதாரண மக்கள் கொள்வனவு செய்ய முடியாத அளவிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் உளுந்து ஒரு கிலோகிராம் ஆயிரம் ரூபாவுக்கும் தேங்கா எண்ணை ஒரு லீற்றர் 600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதால் குறித்த உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விலை அதிகரிப்பிற்கு முன்னர் உளுந்து வடை ஒன்று 20 ரூபாவுக்கும் தோசை ஒன்று 15 ரூபாவுக்கும் விற்பனையாகியுள்ளது.

எனினும் தற்போது உளுந்து வடை ஒன்று 50 ரூபாவுக்கும் தோசை ஒன்று 40 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் வடை மற்றும் தோசை ஆகிய இரண்டிற்கும் உளுந்து தேவைப்படுவதனால் வடையின் அளவையும் சிறியதாக்கி அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

வடக்கின் அன்றாட கூலித் தொழில் செய்பவர்கள் உணவிற்காக வடை மற்றும் தோசை கொள்வனவு செய்கின்றனர். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வட மாகாண விவசாயிகள் உளுந்து பயிர் செய்கையை நிறுத்தியுள்ளமை மற்றும் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து உளுந்து இறக்குமதி செய்யப்படாமையினாலும் இந்த விலை அதிகரிப்பக்கான காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: