வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – திசை மாறியுள்ளதால் அடுத்தவார் வடக்கு கிழக்கில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு – விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Thursday, November 18th, 2021

எதிர்வரும் 24, 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதும் பரவலாக மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை குறித்து தனது முகப்புத்தகத்தில் இது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வங்காள விரிகுடாவில் தோன்றிய தாழமுக்கமானது தீவிர தாழமுக்கமாக மாறி இந்தியாவின் சென்னையிலிருந்து 270கீ.மீ. கிழக்காக கடலில் நிலை கொண்டிருக்கின்றது.

இன்று (18) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தாழமுக்கம் நகர்வு திசையில் மாற்றத்தைக் கொண்டிருப்பதோடு மிகவும் குறைவான வேகத்தில் நகர்வதால் இன்று இரவு அல்லது நாளை காலை சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் மதுராந்தகத்தில் கரையைக் கடக்கும். எனவே வடக்கு மாகாணத்திற்கு கிடைத்து வரும் மழை நாளை வரை தொடர வாய்ப்புள்ளது.

அத்துடன் எதிர்வரும் 24,25, 26 மற்றும் 27ஆம் திகதிகளிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், வடமேல் மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமானஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஜனவரி 1 முதல் இலங்கை வரும் அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் கட்டாயமாக்கப்படுகிறது புதிய நடைமுறை...
எரிபொருள் நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவ...
ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஐங்கரன் முன்மொழிவு- வலி.கிழக்கு பிரதேச சபையால் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும...