ரிஷாட் பதீயுதீனின் கைதை தொடர்ந்து அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உட்பட 7 பேர் கைது – குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணை!

Monday, October 19th, 2020

தெஹிவளை – அபன்சோ வீதியில் அமைந்துள்ள மாடிக்குடியிருப்பில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதீயுதீனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, புத்தளத்தில் இருந்து மன்னார் வரையில் இடம்பெயர்ந்த வாக்காளர்களை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் ஏற்றிச் சென்றதன் மூலம், பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை முதலான குற்றச்சாட்டுக்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 3 பேர் மீது முன்வைக்கப்பட்டன. இதன்படி, ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டு அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனிடையே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமறைவாக இருப்பதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் உட்பட ஏழு போர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அடைக்கலம் வழங்கிய வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளையில் மாநகராட்சி மன்றத்திற்கு முன்பாக அமைந்து சொகுசு குடியிருப்பில் மறைந்திருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபரை மறைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்களான வைத்தியர் மற்றும் அவரது மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை முன்னாள் அமைச்சரை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகயிருப்பதற்கு உதவிய அனைவருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: