யாழ். மாநகர சபையின் மற்றுமொரு ஊழல் அம்பலம்!

Saturday, February 9th, 2019

யாழ். மாநகரசபையில் நல்லூர் உற்சவ காலத்தின்போது 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா ஊழல் செய்யப்பட்டுள்ளது என சபையின் அமர்வில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நல்லூர் உற்சவகாலத்தின் போது ஆலயச் சூழலின் பாதுகாப்பிற்கு என யாழ். மாநகரசபையினால் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் கமராக்களுக்கென ஒப்பந்த அடிப்படையில் குறித்த நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய நிதியினை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா பணத்தினை குறித்த பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கான செலவாக காட்டப்பட்டு ஊழல் மோசடி மேற்கொண்டமை அம்பலமாகியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நல்லூர் உற்சவகால திருவிழாக்களின்போது நல்லூர் பிரதேசத்தின் பாதுகாப்பிற்கென பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கு பகிரங்க கேள்வி கோரப்பட்டது. அதற்கென சில நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

இந்நிலையில் யாழ். பரமேஸ்வராச் சந்தியில் இயங்கும் நிறுவனத்தினரிடம் கேள்வி கோரல் ஏற்கப்பட்டு குறித்த நிறுவனத்திடம் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தும் பணி வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த நிறுவனத்திற்கு யாழ். மாநகரசபையால் 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் யாழ். மாநகரசபையில் நடைபெற்ற அமர்வின்போது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த நல்லூர் ஆலய வரவு செலவு அறிக்கை ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நல்லூர் சூழலில் பாதுகாப்புக் கமரா பொருத்திய செலவாக 10 இலட்சத்து 76 ஆயிரத்து 480 ருபா கணக்குக் காட்டப்பட்டிருந்தமை தொடர்பில் குறித்த நிறுவனத்தினருடன் தொடர்புகொண்டு எவ்வளவு ரூபா மாநகரசபையால் வழங்கப்பட்டுள்ளது என உறுப்பினர்களால் கோரப்பட்டிருந்தது.

அதன் போது குறித்த கண்காணிப்புக் கமரா பொருத்தும் நிறுவனத்தினர் வழங்கிய தகவல் உறுப்பினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .

அதாவது குறித்த நிறுவனத்திற்கு வழங்கிய தொகையை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா பணத்தினை அத் தேவைக்காக செலவிடப்பட்டதாக அறிந்த உறுப்பினர்கள் அந் நிறுவனத்தினரைச் சந்தித்து கலந்துரையாடியபோது தாம் சமர்ப்பித்து வழங்கப்பட்ட ரசீதுகளின் பிரதிகளை உறுப்பினர்களிடம் குறித்த நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சபைஅமர்வின்போது குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டு பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கென 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில் செலவு அறிக்கையில் 10 இலட்சத்து 76 ஆயிரத்து 480 ருபா செலவிடப்பட்டதாக மோசடி இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து சபையில் பிரசன்னமாகியிருந்த கணக்காளரைப் பதிலளிக்குமாறு முதல்வர் ஆர்னோல்ட் உத்தரவிட்ட நிலையில் அது தொடர்பில் உடனடியாகப் பதிலளிக்க முடியாது எனவும் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஏதும் தவறு நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆர்னோல்ட் உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த கமராக்களைப் பொருத்திய நிறுவனம் யாழ். மாநகரசபைக்குச் சமர்ப்பித்த கேள்வி கோரல் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுக்கும் திகதிக்கு முன்னர் உடைக்கப்பட்டு போட்டி நிறுவனம் ஒன்றிற்கு வழக்கப்பட்டதாகவும்,

குறித்த போட்டி நிறுவனம் அதன் பிரதியை, பாதுகாப்புக் கமராக்களை குறித்த நிறுவனங்களுக்கு வழங்கும் சீன நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி வைத்ததாகவும் அதனடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்புக் கமராக்களை பொருத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் குறித்த நிறுவனத்தினருடான தங்கள் ஒப்பந்தத்தை அச் சீன நிறுவனம் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: