யாழ் மாநகரசபையில் தலைவிரித்தாடிய இலஞ்ச  ஊழல் அம்பலம் :  அச்சத்தில் முதல்வர் ஆர்னோல்ட்.!

Saturday, September 29th, 2018

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்ட் தலைமையிலான யாழ் மாநகரசபை நிர்வாகத்தில் கடந்த ஐந்து மாத நிர்வாகத்தில் மிகப் பெரும்  ஊழல் மோசடிகள் நடைபெற்றதை மாநகரசபையின் இலஞ்ச, ஊழல் குழு கண்டறிந்து பகிரங்கப்படுத்தியமையால் மாநகரசபையின் அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போதே, மாநகரசபையின் முறையற்ற ஆளணி நியமனம், இலஞ்சம் பெற்றமை, சட்டவிரோத இறைச்சி விற்பனை, முறையற்ற களஞ்சிய பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை யாழ் மாநகரசபையின் இலஞ்ச ஊழல் குழு முன்வைத்தது.

நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் சபை அனுமதியுடன் தற்காலிக தொழிலாளிகள் 40 பேர் மாநகரசபை தொழிலாளர் சங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் 12 பேரிடம் ஒரு தொகை இலஞ்சம் பெற்றுக்கொண்டே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 12 பேரிடமும் இருந்து சங்க உறுப்பினர்களால் இதுவரை பகுதிபகுதியாக 42 ஆயிரம் ரூபா இலஞ்சப்பணம் செலுத்தியுள்ளனர். இதனை அந்த 12 பேரும் ஒப்புக்கொண்டு எழுத்து மூலம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

நல்லூர் திருவிழா காலத்தில் பணிக்கு அமர்த்த சபையால் ஒப்புதல் வழங்கப்பட்ட பணியாளர்களின் தொகையை தவிர மேலதிக பணியாளர்கள் மேயரின் சிபாரிசில் ஆனையாளரால் சபையின் அனுமதியின்றி பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேபோல, கோம்பையன் மயானத்தில் மேயரின் ஒப்புதலுடன், ஆணையாளரால் ஒருவர் தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

அந்த ஒப்பந்தக்காலம் முடிந்ததும், மேலதிக ஒப்பந்தக்காலம் மேயர், ஆணையாளரின் அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ளது. மேயர், ஆணையாளரின் ஒப்புதல் இன்றி அவருக்கான ஒப்பந்தக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழா காலங்களில் பணியில் இருந்தவர்கள், அங்கும் கையொப்பம் இட்டுவிட்டு, யாழ் நவீன சந்தை பகுதியிலும் தாம் பணியில் இருந்ததாக கையொப்பமிட்டுள்ளனர்.

மாநகரசபையின் களஞ்சியத்தில் உள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டாவளை மண்ணின் அளவிலும் பார்க்க, 12 கியூப் மண் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல 24 இரும்புக்குழாய்கள்  காணாமல் போயுள்ளன.

இந்த குற்றங்கள் தொடர்பில் அந்தந்த பகுதிக்கு பொறுப்பானவர்கள் உரிய பதிலை தரவில்லை, தொழிலாளர் சங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் மறுப்பு தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென்று இலஞ்ச ஊழல் குழு சபையில் பகிரங்கப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதிகாரம் மிக்க வடக்கு மாகாண சபையை கைப்பற்றியபோதிலும் மக்கள் நலன்களை முன்னிறுத்தாது ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு தமது சொந்த நலன்களை முன்னிறுத்தி மக்களை ஏமாற்றியது.

அதுபோலவே யாழ் மாநகர சபையையும் தம்வசப்படுத்திய கூட்டமைப்பு ஆட்சியேற்று 5 மாதங்களுக்குள் பல்வேறு மோசடிகளையும் ஊழலையும் மேற்கொண்டுள்ளமை தற்போது வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆழுமையின்மையும் சுயநல போக்கும் தான் இவ்வாறான மோசடிகளுக்கு களம் அமைக்கின்றது என வருத்தம் தெரிவிக்கும் சமூக நலன்விரும்பிகள் அக்கறையும் ஆற்றலும் உள்ள தரப்பினரை இனியாவது அதிகாரங்களில் அமரச் செய்ய மக்கள்  விழிப்படைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: