யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் கணினிமயச் சேவைகள்!

Wednesday, May 16th, 2018

யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கணினி மயப்படுத்தப்பட்ட சேவைகள் முதற் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன என வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

யாழ். போதனா வைத்தியசாலையின் கணினி மயப்படுத்தப்பட்ட நடைமுறைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் முதற் கட்டமாக வெளிநோயாளர் பிரிவில் கணினிமயப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வருகை தரும் நோயாளர்களின் பதிவுகள் தற்போது கணினிமயப்படுத்தப்படுகின்றன. இந்த சேவைகளை சீரான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குக் குறிப்பிட்ட சில மாத காலம் எடுக்கலாம்.

அதன் பின்னர் வைத்தியசாலையின் ஏனைய சிகிச்சைகளும் கணினி மயப்படுத்தப்பட உள்ளன. இந்த முறைமை வடக்கில் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே முதலாவதாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதேபோன்று வடக்கு மாகாணத்தில் அடுத்ததாக மன்னாரிலும் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறு கணினிமயப்படுத்தப்பட்ட சேவைகளினூடாக நேர வீண் விரயம் தவிர்க்கப்படுவதுடன் இலகுவில் விரைவான சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்றார்.

Related posts: