யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை முகாம் ஆளுநரால் ஆரம்பித்துவைப்பு!

Tuesday, October 31st, 2023

யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை முகாம் ஆளுநரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

உலக பார்வை தினத்தை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவினால் கண் சத்திரசிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமானது நேற்றைய தினம் (30.10.2023) கௌரவ வடமாகாண ஆளுநர் கெளரவ பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்விலே கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள், ஏனைய வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பயனாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கண் சத்திர சிகிச்சை முகாமிலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதே தமது இலக்கு என வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.

யாழ் போதனா வைத்தியசாலை இந்தக் கண்புரை சத்திரசிகிச்சை முகாமினை ஏற்பாடு செய்தமைக்கு வாழ்த்துத் தெரிவித்த ஆளுநர் யாழ் போதனா வைத்தியசாலை மிகவும் சிறப்பாகவும் சுத்தமாகவும் இருப்பதாகவும் சாதாரணமாக இச்சத்திரசிகிச்சையை மேற்கொள்வதாயின் ஒருவருக்கு இலட்சக்கணக்கில் செலவு ஏற்படும், ஆனால் இம்முகாமிலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு இலவச சத்திரசிகிச்சை மேற்கொள்வதென்பது மிகவும் பெறுமதியான விடயமாகும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் இந்த முகாமானது யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இரத்தினபுரி வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர்களும் கலந்து கொண்டு சத்திரசிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்கள். நேற்றையதினம் 220 பேருக்கு கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதிலே வடக்கு மாகாணம் மட்டுமல்லாது ஏனைய மாகாணத்தை சேர்ந்த பயனாளர்களுக்கும் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது

000

Related posts: