யாழ். போதனாவிலிருந்து வறியவர்களின் சடலங்களை எடுத்துச் செல்ல வாகனம்!

Friday, January 25th, 2019

யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழக்கும் வறிய மக்களின் உடலை எரிபொருள் செலவுடன் மட்டும் அவர்களது இடங்களுக்குச் சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கென்று முதற்கட்டமாக வாகனம் ஒன்று புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் மருத்துவமனைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது என்று மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஒரேயொரு போதனா மருத்துவமனை என்பதன் அடிப்படையில் ஏனைய மாவட்ட மருத்துவனைகளில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு நோயாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர். அவர்களில் சிலர் சிகிச்சை பயனளிக்காது உயிரிழக்கின்றனர்.

அவ்வாறு உயிரிழப்பவர்களில் ஏனைய மாவட்டத்தவர்கள், குடாநாட்டில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்களின் உடல்களைக் கொண்டு செல்வதற்கு அவர்களது உறவுகள் அதிக பணம் செலவிடுகின்றனர்.

எனவே வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வறுமையில் வாழ்பவர்களுக்கு மட்டும் எரிபொருள் செலவை மாத்திரம் பெற்றுக்கொண்டு உடலை அவர்களது வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளோம். புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் உறவுகள் இதற்கு நிதி வழங்கியுள்ளனர்.

அந்த நிதியிலிருந்து வாகனமொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாகவே இந்தப் பணியை ஆரம்பிக்க முடியும். வசதியற்றவர்கள் தமது உறவுகள் இறந்தால் எரிபொருள் செலவுடன் வாகனத்தைப் பெற்று சடலத்தை எடுத்துச் செல்ல முடியும்.

Related posts: