யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலை மூடப்பட்டுவிட்டதா..?

Tuesday, June 5th, 2018

நாட்டின் கல்வித்துறைக்கு திறமையான ஆசிரியர்களை உருவாக்கிய யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் செயற்பாடுகள் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

1947ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கலாசாலை, பலாலி  பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, 1986 ஆம் ஆண்டு தொடக்கம் கலாசாலையின் செயற்பாடுகள் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன.

2012 ஆம் ஆண்டு பலாலி ஆசிரியர் கலாசாலையின் நிதி மற்றும் நிர்வாகம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருநெல்வேலி முத்து தம்பி ஆரம்ப பாடசாலையில் இயங்கி வந்த பலாலி ஆசிரியர் கலாசாலை சில பிரச்சினைகள் காரணமாக 2006 ஆம் ஆண்டு முதல் முற்றாக செயலிழந்தது.

ஆரம்பத்தில் 54 பரப்புக் காணியில் இயங்கிய இக்கலாசாலையில் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டன. அக்கால பகுதியில் 700- 800 வரையான மாணவர்கள் ஆசிரியர் பயற்சிகளை பெற்றுவந்தனர். பாதுகாப்பு வலய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து இங்கு கற்பித்த ஆசிரியர்கள் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு மாற்றப்பட்டனர்.

பலாலி ஆசிரியர் கலாசாலை மூடப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கல்வி நடவடிக்கைகளைத் தாம் பொறுப்பேற்கத் தயாராக இருந்ததாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் வீரகத்தி கருணாலிங்கம் தெரிவித்திருந்தார்.

அதிபர் மேலும் இது குறித்து தெரிவிக்கையில் பலாலி ஆசிரியர் கலாசாலையின் பாடத்திட்டங்கள் கோப்பாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. எல்லா பாட நெறிகளையும் கோப்பாயில் பயிற்றுவிப்பது மிகவும் கஷ்டமான காரியம் எனவும் பலாலி ஆசிரியர் கலாசாலை இயங்குவதையே தாம் மனப்பூர்;வமாக விரும்புவதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

ஆனால்  உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையை விடுக்கும் நிலைப்பாட்டில் தாம் இல்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: